பல அதிரடி பேட்ஸ்மேன்களைக்கூட தனது அபாயகர பவுன்சரினால் அச்சுறுத்தியவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். தனது அசுரவேக பந்துவீச்சினால் பல முன்னணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பதம்பார்த்த பெருமையைப் பெற்றவர். மேலும் தனது அதிவேக பந்துவீச்சு திறமையினால் ரசிகர்கள் மத்தியில் 'பலபோர்வா எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படுபவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இவர் தற்போது ஒருநாள், டி20 போன்ற குறுகிய கால போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில்கூட இவர் பெங்களூரு அணிக்காக விளையாடி தனது வேகப்பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தி அசத்தினார்.
தற்போது, 36 வயதாகும் ஸ்டெயின் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள பிக் பாஷ் டி20 தொடரிலும் தனது கால்தடத்தை பதிக்கவுள்ளார். மெல்போர்ன் ஸ்டாரஸ் அணியுடன் ஒப்பந்தமான இவர், அந்த அணிக்காக முதல் ஆறு போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளார். இதன்மூலம், இந்த பிக் பாஷ் சீசனில் பங்கேற்கும் மூன்றாவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக, ஏ.பி. டி வில்லியர்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காகவும், கிறிஸ் மோரிஸ் சிட்னி தண்டர் அணிக்காகவும் விளையாட ஒப்பந்தமாகினர்.
பிக் பாஷ் டி20 தொடரில், மெல்போர்ன் ஸ்டோர்ஸ் அணி தனது முதல் போட்டியிலேயே, பிரிஸ்மேன் ஹீட் அணியை எதிர்கொள்கின்றனர். இதனால், ஸ்டெயின் vs டி வில்லியர்ஸ் பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போட்டி டிசம்பர் 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.40 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க: பிக் பாஷூக்கு என்ட்ரி தரும் கிரிக்கெட் 360!