நடப்பு ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய பெங்கால் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி சிறப்பாக ஆடினார். இந்தப் போட்டியில் அபாரமாக ஆடி 414 பந்துகளில் 303 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் 30 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவர் 10 மனி நேரம் 30 நிமிடங்கள் களத்தில் இருந்ததால், பெங்கால் அணி 635 ரன்களைக் குவிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.
21 வருடங்களுக்குப் பிறகு பெங்கால் வீரர் ஒருவர், முச்சதம் விளாசியுள்ளதார். இதற்கு முன்னதாக 1998ஆம் ஆண்டு தேவாங் காந்தி அஸ்ஸாம் அணிக்கு எதிராக 323 ரன்கள் விளாசியிருந்தார்.
சில மாதங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் ஏலத்தில் மனோஜ் திவாரியை வாங்குவதற்கு எந்த அணியும் முன்வராததால், அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் இந்த ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பெங்கால் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த நேரத்தில் முச்சதம் விளாசி அனைவரது விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: காயமடைந்த இஷாந்த் சர்மா... நியூசிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!