கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சமூக விலகளைப் பின்பற்ற, தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர், இன்ஸ்டாகிராம் நேரலையில், 2017ஆம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின் போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னிடம் கோபமாக நடந்து கொண்டது குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், “இலங்கை அணிக்கெதிரான இந்தூரில் நடைபெற்ற டி20 போட்டியில், குசால் பெரேரா, நான் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசினார். உடனே தோனி சத்தமாக என்னிடம் பீல்டர்களை மாற்றி, பந்துவீசும் படி கூறினார். ஆனால், நான் வீரர்களை மாற்றாமல் பந்துவீச்சைத் தெடர்ந்தேன். குசால் மீண்டும் எனது பந்துவீச்சில் பவுண்டரியை விளாசினார்.
உடனே தோனி என்னிடம் வந்து, ‘பைத்தியமா? நான் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், நீங்கள் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறீர்கள்’ எனத் தெரிவித்தார். அன்று நான் அவரைக் கண்டு மிகவும் பயந்தேன். அந்தப் போட்டி முடிவுக்குப் பிறகு, நான் மற்ற அணி வீரர்களுடன் பேருந்தில் செல்லும் போது, தோனியிடம் நீங்கள் எப்போதாவது கோபப்பட்டதுண்டா? எனக்கேட்டேன்.
அதற்கு அவர், ‘கடந்த 20 வருடங்களில் நான் எந்தவொரு சூழ்நிலையிலும் கோபப்பட்டது கிடையாது’ எனத் தெரிவித்தார். அதன் காரணமாக, அவர் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த போதிலும், அவருக்கான ரசிகர்கள் மட்டும் குறையவில்லை” என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அதிக போட்டிகளில் விளையாட தோனி தான் முக்கிய காரணம் - கேதர் ஜாதவ் ஓபன் டாக்!