இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவை, இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தேர்வு செய்யாதது ஏன்? என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய லாரா, "ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பார்க்கையில், ஏன் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அவர் ஆட்டத்தின் சூழல் அறிந்து விளையாடும் வீரர். மேலும் அவரது ஆட்டமுறை, களமிறங்கும் வரிசை ஆகியவை இந்திய அணிக்கு உதவியாக அமைந்திருக்கும்.
சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல சிறந்த ஆட்டங்களை வழங்கியுள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த டாப் 10 வீரர்கள் பட்டியலிலும் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். இப்படி இருந்தும் அவரை அணியில் சேர்க்காதது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யகுமர் யாதவ், 480 ரன்களைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'இந்திய கால்பந்து வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' - மார்க்வெஸ்