ஐசிசி சேர்மனாகப் பதவிவகித்துவந்த ஷாஷங்க் மனோகர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே பதவி விலகினார். இதனால் அடுத்த ஐசிசி சேர்மன் யார் என்ற கேள்வி அனைத்து கிரிக்கெட் வாரிய அலுவலர்களுக்கிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா ஐசிசி சேர்மன் பதவிக்கு கங்குலியை முன்னிறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''ஐசிசி சேர்மன் பதவிக்கு தாதா சரியாக இருப்பார் என நினைக்கிறேன். அவரால் அனைவருக்கும் தேவைப்படும் மாற்றத்தை உருவாக்க முடியும். இதனை ஒரு ரசிகராக வலியுறுத்தவில்லை. அவர் ஒரு புத்திசாலித்தமான கிரிக்கெட் நிர்வாகி.
கிரிக்கெட்டுக்கு எது நல்லது என்பதை எப்போதும் மனதில் வைத்து செயல்படுபவர். ஐசிசி சேர்மனாக இருக்கும்போது பிசிசிஐ, ஈசிபி, எஸ்எல்சி என அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரிக்கெட்டுக்கு எது தேவை என்ற எண்ணம் மட்டும் மாறாவே கூடாது.
கிரிக்கெட்டின் அடித்தளம் என்பது குழந்தைகள், ரசிகர்கள், பார்வையாளர்கள்தான். அதனால் அவர்களுக்கு என்ன தேவை என்பதும், கிரிக்கெட்டுக்கு எது நல்லது என்பதும் கங்குலிக்கு நன்றாகத் தெரியும்.
பிசிசிஐ தலைவராக வருவதற்கு முன்பாகவே அவரின் வேலைகள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களுடனான அவரின் நட்பு பற்றியும் தெரியும். அதனால் ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி மிகச்சரியாகப் பொருந்துவார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை'' என தெரிவித்தார்.
ஏற்கனவே ஐசிசி தலைவர் பதவிக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் கிரேம் ஸ்மித் கங்குலியை முன்மொழிந்த நிலையில், சங்ககாராவும் வழிமொழிந்திருப்பது ஐசிசி தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ஐபிஎல் தொடரை நடத்துவதில் மட்டுமே கவனம்' - பிசிசிஐ