ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் நிதானம், அதிரடி என இரண்டும் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல், 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 69 பந்துகளில் 132 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவரது சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 206 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை விரட்ட முடியாமல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
கே.எல். ராகுல் தனது சதத்தின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு தொடரில் வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் சதமடித்து, அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற மற்றொரு பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும், சச்சின் டெண்டுல்கரின் 8 ஆண்டு கால சாதனையையும் கேஎல் ராகுல் முறியடித்துள்ளார்.
முன்னதாக, 63 இன்னிங்ஸ் விளையாடி 2000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை புரிந்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். இதையடுத்து தற்போது 60 போட்டிகளிலேயே 2000 ரன்களை ராகுல் கடந்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை நடப்பு ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தி வருகிறார் கே.எல். ராகுல்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் வரலாற்றின் புதிய தொடக்கம்! - #T20WorldCup2007Rewind