கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் லேஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி அணிக்கு நல்லத் தொடக்கத்தை தந்தார். கடந்த போட்டியில் சதம் விளாசிய கே.எல். ராகுல் இப்போட்டியில் வெறும் 18 ரன்களில் நடையைக் கட்டினார்.
அவரைத் தொடர்ந்து வந்த மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் தலா 15 ரன்களுடனும், சாம் கரண் ஒரு ரன்னுடனும் கெயிலின் அதிரடியான ஆட்டத்துக்கு ஒத்துழைக்கமால் பெவிலியன் திரும்பினர். இதனால், பஞ்சாப் அணி 13.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.
இதனிடையே, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடிய கெயில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 27வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மந்தீப் சிங்குடன் ஜோடி சேர்ந்து தனி ஒருவனாக பெங்களூரு அணியின் பந்துவீச்சை கெயில் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக வெளுத்து வாங்கினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் விளாசுவதற்கு கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கெயில் அடித்த பந்து பவுண்டரிக்கு மட்டுமே சென்றது. இதனால், அவர் 99 ரன்களோடு இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்ததால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்களை குவித்துள்ளது. 64 பந்துகளை எதிர்கொண்ட கெயில் 10 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசினார். அந்த அணி கடைசி ஐந்து ஓவர்களில் 51 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
பெங்களூரு அணி சார்பில் சாஹல் இரண்டு, முகமது சிராஜ் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை வீரர் ரெய்னாவிற்கு பிறகு 99 ரன்களோடு ஆட்டமிழக்கமால் களத்தில் இருக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கெயில்.