சர்வீசஸ் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், கர்நாடக வீரர் மனிஷ் பாண்டே 55 பந்துகளில் 129 ரன்கள் விளாசினார்.
இந்த ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 'குரூப் ஏ'க்கான லீக் போட்டியில் கர்நாடக அணி, சர்வீசஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணியில், கேப்டன் மனிஷ் பாண்டே சிறப்பாகப் பேட்டிங் செய்தார். 55 பந்துகளில் 12 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என 129 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
இதனால், கர்நாடக அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து, 251 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த சர்வீசஸ் அணி, 170 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், கர்நாடக அணி இப்போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கர்நாடக அணி விளையாடிய நான்குப் போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மனிஷ் பாண்டே இரண்டு நாட்களுக்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடியப்பிறகு, தற்போது சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐந்து பந்தில் ஐந்து சிக்சர்... ஜஸ்ட் மிஸ்ஸான யுவி.யின் சாதனை!