கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இப்பெருந்தொற்றிலிருந்து நியூசிலாந்து நாடானது முழுவதுமாக மீண்டுவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் இப்பேருந்தொற்றின் கடைசி பதிவானது மே 22ஆம் தேதியோடு முடிவடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக வலம்வரும் ஜிம்மி நீஷம் கரோனாவிலிருந்து மீண்டதற்கு தன் நாட்டு மக்களுக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில், 'நியூசிலாந்தை கரோனா வைரஸிலிருந்து மீட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இதற்காக நியூசிலாந்து மக்கள் மேற்கொண்ட மூன்று முக்கிய பண்புகளாக திட்டமிடல், உறுதிப்பாடு, குழு பணி ஆகியவை உறுதுணையாக இருந்தன' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நியூசிலாந்தில் தற்போது வைரஸ் பரவுவதை நாங்கள் முற்றிலுமாக அகற்றிவிட்டோம் என்று நம்புகிறோம். இருப்பினும் அதனை முற்றிலுமாக நீக்குவதே எங்களது நோக்கமாகவும், முயற்சியாகவும் உள்ளது' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.