ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை இந்தாண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்திலிருந்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்காக சிறிய அளவிலான வீரர்கள் ஏலத்தையும் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது அணியில் உள்ள தேவையற்ற வீரர்களை, அணியிலிருந்து விலக்கி புது வீரர்களை தேர்வு செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முரளி விஜய், கேதர் ஜாதவ் உள்ளிட்ட ஐந்து வீரர்களின் ஒப்பந்ததை முடித்துக்கொண்டது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கான மாற்று வீரரை தேடும் முயற்சியிலும் சிஎஸ்கே நிர்வாகம் மும்முரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷேன் வாட்சனுக்கான மாற்று வீரரைத் தேடவேண்டிய நேரம் இது. ஏனெனில் கடந்த சீசன்களில் ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனல் தற்போது அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளதால், அவருக்கான இடத்தை நிரப்பும் வீரரை சென்னை அணி நிர்வாகம் கட்டாயம் தேர்வு செய்யவேண்டும்.
அதேசமயம் நடப்பு சீசனில் சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ளதால், அணியின் தொடக்க வீரருக்கான தேடலில் சென்னை அணி கவனம் செலுத்தும் என நம்புகிறேன். மேலும், அணியில் உள்ள வீரர்கள் ஏறக்குறைய 30 வயதை தாண்டியவர்கள் என்பதால், வாட்சனுக்கான இடத்தில் ஒரு இளம் வீரரைத் தேடுவது சென்னை அணிக்கு மிகவும் அவசியமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணி என்ற புணைப்பெயருடன் அழைக்கப்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற தொடரில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குகூட தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் வரவுள்ள ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி எந்தெந்த வீரர்களை ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டிற்கு ரெஸ்ட் கொடுக்கும் டி காக்!