இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடர் ஜூலை 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்திற்கு முன்னதாக சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தத் தொடர் பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கீமார் ரோச் பேசுகையில், ''ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக ஆடவேண்டும் என்ற முடிவு எடுத்தது அவரின் விருப்பம். அவரின் ஆட்டம் இதுவரை சிறப்பாக அமைந்துள்ளது. அவருடனான நட்புக்கு இந்தத் தொடரில் இடமில்லை. இங்கிலாந்து அணியை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு.
ஆர்ச்சருக்கு எதிராக எங்களிடம் சரியான திட்டம் உள்ளது. நிச்சயம் அவரின் பவுன்சர்களுக்கு பதிலடி கொடுப்போம். எங்களுக்கும் அவருக்கும் இடையே நிச்சயம் சிறந்த போட்டி இருக்கும்.
பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்தக் கூடாது என ஐசிசி தடை விதித்துருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கப் போகிறது. தட்பவெட்ப நிலையும் குளிர்ந்து காணப்படுவதால், வியர்வையும் அதிகமாக பயன்படுத்த முடியாது. சில திட்டங்கள் வைத்துள்ளோம்'' என்றார்.
நான்கு மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கவுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்தத் தொடர் ஏற்படுத்தியுள்ளது.