இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்பவர் இஷாந்த் ஷர்மா. இவர், தனது அபாரமான பந்துவீச்சினால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. அதுவரை, பவுலிங்கில் அசத்தி வந்த இஷாந்த் ஷர்மா பேட்டிங்கிலும் முதல்முறையாக அரைசதம் விளாசினார். 80 பந்துகளில் 7 பவுண்ட்ரி அடித்த அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை சேர்த்தது.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டை எடுத்ததன் மூலம், அந்நிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் (146) என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனை (145) முறியடிக்கப்பட்டது. இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் ஷர்மா 276 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.