இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் இர்ஃபான் பதான். இவர் சமீபத்தில் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இனி வரும் ஐசிசி தொடர்களுக்கு முன்பாகவே இந்திய அணி சரியான திட்டமிடலை செய்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இந்திய அணியால் நிச்சயமாக பல போட்டிகளை வென்று காட்ட முடியும். இருப்பினும் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலேயே தொடரிலிருந்து வெளியேறியது. மேலும் அச்சமயம் நம்மிடம் பல வீரர்களும், தேவையான உடற்தகுதி திறன்களும் இருந்தன. இருப்பினும் நான்காம் வரிசையில் யாரை களம் இறக்குவது என்பது பற்றிய விவாதம் முடிவதற்குள்ளாகவே, உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி சென்றது. அந்த ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இந்திய அணி தவறிழைத்ததால் கோப்பையையும் இழக்க நேரிட்டது.
அதனால் இனி வரும், ஐ.சி.சி தொடர்கள், உலகக் கோப்பை தொடர்களுக்கு செல்வதற்கு முன்பாகவே சிறந்த திட்டமிடல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம்மிடம் சிறந்த திட்டமிடல் இருந்தால், உலக சாம்பியனாக இருப்பதற்கான அனைத்து வழிகளும் நம்மிடம் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.