கரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் தற்போது டி20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் வருகிற அக்டோபர் மாதத் தொடக்கத்தில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக வலம்வரும் தீபக் சஹர், தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஐபிஎல் தொடர் தொடங்கினால் வீரர்களுக்கு அது ஒரு சிறந்த சீசனாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 'நான் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் சமயத்தில் காயம் காரணமாக அணியிலிருந்து விலக நேரிட்டது. மேலும் எனது காயம் குணமடைய மூன்று மாதங்களாவது தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியதும் எனக்கு சிறிது தயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் நான் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.
ஆனால் தற்போது கரோனா வைரஸினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எங்களுடைய பயிற்சிகளை மேற்கொண்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. இருப்பினும் நாங்கள் வெகுவிரைவில் பயிற்சிக்கு திரும்புவோம் என்று நம்புகிறேன்.
இந்த வைரஸின் தாக்கம் குறைந்தவுடன் நிச்சயம் ஐபிஎல் தொடர் தொடங்கும் என நினைக்கிறேன். மேலும் இத்தொடர் தொடங்குவதால் விளையாட்டு வீரர்களுக்கு போதிய பயிற்சிக்கான அவகாசம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இருப்பினும், அதற்கு முன்னதாக நாங்கள் சில போட்டிகளில் விளையாட்டினால் நன்றாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.