கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திவரும் மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இதனால், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்க அதிக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மும்பை அணியின் இந்த அசுரப் பாய்ச்சலுக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளார் ட்ரண்ட் போல்ட் தொடக்கம் முதலே சிறப்பான முறையில் பந்துவீசி பங்களித்து வருகிறார்.
இந்த சீசனில் இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஆறு போட்டிகளில் பவர்-பிளேவிற்குள் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தி எதிரணியை ரன் எடுக்கவிடாமல் ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்து வருகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான ட்ரண்ட் போல்ட் அணிக்கு தொடர்ந்து பலம் சேர்த்து வருகிறார்.
நேற்று (அக்.16) வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட, தனது இரண்டாவது ஓவரில் தொடக்க வீரர் திரிபாதியின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். நான்கு ஓவர்களை வீசிய போல்ட் 32 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தத் தொடரில், எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள போல்ட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல்லில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்களின் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.