இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரித்வி ஷா ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி எட்டு மாத தடைக்குப்பின் சையத் முஷ்டாக் டி20 தொடரில் மும்பை அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
ரஞ்சி போட்டியில் அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். இதன் பலனாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று ஒருநாள், இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியின் போது பிரித்வி ஷாவின் இடதுகை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக உடனடியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக இந்திய ஏ அணி நாளை மறுநாள் (ஜனவரி 10) நியூசிலாந்துக்கு புறப்படவுள்ளது. தற்போது காயம் காரணமாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியிலிருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 22ஆம் தேதி லிங்கன் நகரில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது சவாலான ஒன்று - ரோஹித் சர்மா