2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் அடுத்தடுத்து 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை குவித்து கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன் போன்ற ஜாம்பவான்கள் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய தூணாக விளங்கியதே இதற்குக் காரணமாகும். இந்த சூழலில், இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தங்களின் தொடர்ச்சியான 16ஆவது வெற்றியையும் பதிவு செய்தது. இதனையடுத்து மூன்றாவது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் 19 வயது இளைஞர் (இஷாந்த் ஷர்மா) ஒருவர் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங்கை ரன் அடிக்கவிடாமல் தலைவலியை கொடுத்து, அவர் விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடர்ச்சியாக 16 வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் இஷாந்த் சர்மா என்ற இளைஞனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. அந்த தொடரில் சராசரியாக 140 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதன்மூலம், இந்தியாவிற்கு சிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் கிடைத்துவிட்டார் என அனைவரும் நம்பினர். அதை நிரூபிக்கும் வகையில், இஷாந்த் சர்மாவும் அடிலெய்டில் நடைபெற்ற 4ஆவது டெஸ்டில் 152.6 கி.மீ வேகத்திற்கு பந்தை வீசினார். இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் 150 கி.மீ வேகத்திற்கு மேல் வீசியது அதுவே முதல்முறையாகும். அதற்கு முன்னதாக நெஹ்ரா 149.7 கி.மீ வேகத்தில் வீசியதே அதிகபட்சமாக இருந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தொடரை வென்ற இந்திய அணிக்கு, இஷாந்த் உறுதுணையாக இருந்தார். இதன்பிறகே கிரிக்கெட் உலகில் அனைவரது கண்களும் இஷாந்த் ஷர்மா பக்கம் திரும்பியது. இதன்மூலம், 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்காக ரூ. 3.8 கோடிக்கு இவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த ஆண்டில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பந்துவீச்சாளரும் இவர்தான்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட வந்தது. அந்தத் தொடரில், 15 விக்கெட்களை வீழ்த்தி ‘தொடர் நாயகன்’ விருதையும் இஷாந்த் பெற்றார். இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியதற்கு இஷாந்தும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இவர் ‘டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட்’ என்றழைக்கப்பட்டார்.

2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றுவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இங்கிலாந்தின் மோர்கன், ரவி போபரா ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்து வெற்றிக்கு வழிவகுத்தார் இஷாந்த். இதனால், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையையும் வெல்லும். இதனையடுத்து, 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. இதில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து வீரர்களை மிரட்டியதன்மூலம், இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது.

சிறந்த பந்துவீச்சாளராக மட்டுமே அறியப்பட்ட இஷாந்த் சர்மா, தனது பேட்டிங் திறமையிலும் திடீரென கெத்து காட்டுவார். ஜமைக்காவில் நடைபெற்றுவரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதுவரை பவுலிங்கில் இந்திய அணிக்கு கைகொடுத்த இவர், தற்போது பேட்டிங்கிலும் கைகொடுத்துள்ளார்.

நீளமான தலைமுடியும், உயரமான தோற்றமும்தான் இஷாந்தின் அடையாளம். ரசிகர்கள் இவரின் உயரத்தை வைத்து ‘லம்பு’ என்று செல்லமாக அழைத்தனர். ஆயிரம் விமர்சனங்கள் இவர்மேல் இருந்தாலும், இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளாராக இன்றளவும் திகழ்ந்து வருகிறார் ’லம்பு’. இன்று பிறந்தநாள் கொண்டாடும் லம்புவிற்கு வாழ்த்துகள்!