வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதைதொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக அந்த அணியில் நேஷ்ன், ஹென்ரி ஆகியோரைத் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை கூட எடுக்கவில்லை.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ராதா யாதவ், தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா(0), ஸ்மிருதி மந்தனா(3) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மர்ப்ரீட் கவுர் 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி சற்று தடுமாறியது.
பின் ரோட்ரிக்ஸின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி 16.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணி சாதனைப்படைத்துள்ளது.
சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தொடர்ந்து பேட்டிங்கில் மிரட்டும் ஷஃபாலி வர்மா