சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் கலந்துகொள்ளும் உலகக்கோப்பை தொடருக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐசிசியின் நிரந்தர உறுப்பினர்களான பதினோரு அணியும், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், கனடா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட ஐந்து அணியும் தகுதிச் சுற்றின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரிவில் நியூசிலாந்து, இலங்கை, புதிய வரவான ஜப்பான் அணியும் இடம்பெற்றுள்ளது.
குரூப் ஏ: இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான்
குரூப் பி: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா
குரூப் சி: பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து
குரூப் டி: ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா
உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் தென் ஆப்பிரிக்காவின் நான்கு நகரங்களில் உள்ள எட்டு மைதானங்களில் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகியவை பாட்செட்ஃபஸ்ட்ரமில் உள்ள ஜேபி மார்க்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கயை எதிர்கொள்கிறது. இப்போட்டி ப்ளம்பான்டெய்ன் நகரில் உள்ள மான்காங் மைதானத்தில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஜப்பானையும், 24ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி சந்திக்கிறது.
இந்த யு-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நான்கு முறை சாம்பியன் மகுடத்தை சூடியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி மூன்று முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.