வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் பின் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.
ஆரம்பத்திலே 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் விக்கெட்டை ஹோல்டர் கைப்பற்றினார். அதன் பின் களமிறங்கிய சட்டேஷ்வர் புஜாராவும் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
![அரைசதமடித்த மகிழ்சியில் விராட் கோலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4295339_virat.jpg)
அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து அணியின் ரன்கணக்கை உயர்த்த தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் மற்றும் கோலி இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.
அதன் பின் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் ஹோல்டரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலியின் விக்கெட்டையும் ஹோல்டர் கைப்பற்றினார்.
![விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஜேசன் ஹோல்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4295339_holder.jpg)
பின் களமிறங்கிய அஜிங்கிய ரஹானே 24 ரன்களில் பெவிலியன் திரும்ப பின்னர் வந்த ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியின் ரன் கணக்கை உயர்த்த தொடங்கினர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும், ரிஷப் பந்த் 27 ரன்களுடனும் களத்திலுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.