நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இரு அணிகளும் அணியில் எந்தவித மாற்றமுமின்றி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய கப்தில், ஷர்தல் தாகூர் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்களை விளாசி அசத்தினார். இதைத்தொடர்ந்து அபாரமான லைன் அண்ட் லென்த்துடன் பந்துவீசிய ஷமியின் இரண்டாவது ஓவரிலும் பும்ராவின் மூன்றாவது ஓவரிலும் ரன்கள் அடிக்க கப்தில், முன்ரோ ஆகியோர் தடுமாறினர்.
முதல் ஓவரில் 13 ரன்கள் வழங்கிய தாகூர் மீண்டும் பவர் பிளேவின் கடைசி ஓவரான ஆறாவது ஓவரை வீச வந்தார். அவரது பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்த கப்தில் அடுத்த பந்திலேயே கோலியிடம் கேட்ச் தந்து 33 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, ஒன்பதாவது ஓவரில் காலின் முன்ரோ சிவம் தூபே பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயற்சித்து இறுதியில் கோலியிடம் கேட்சை வழங்கி 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து, டி கிராண்ட்ஹோம் மூன்று ரன்களிலும், வில்லியம்சன் 14 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து அணி 12.3 ஓவர்களில் 82 ரன்களுக்கு நான்கு முக்கிய புள்ளிகளின் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்களான டெய்லர், செஃபெர்ட் ஆகியோர் தடுமாறினர்.
பும்ரா வீசிய இறுதி ஓவரில் டெய்லர் 14 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்ட, இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா இரண்டு, ஷர்துல் தாகூர், பும்ரா, சிவம் தூபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என கருதப்படும் இந்த ஆடுகளத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 203 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியால் இம்முறை 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதைத்தொடர்ந்து, சேஸிங் செய்துவரும் இந்திய அணி சற்றுமுன்வரை இரண்டு ஓவர்களின் முடிவில் ஒறு விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா எட்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: பேட்டிங்கால் விமர்சிப்பவர்களின் வாயை அடக்கு - ரிஷப் பந்திற்கு கபில் தேவ் டிப்ஸ்