இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேட்பன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிகபட்சமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார்.
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹனுமா விகாரி 42 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்திலிருந்தனர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் - விகாரி இணை இந்திய அணி 400 ரன்கள் எடுக்க உதவும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே வெஸ்ட் இண்டீஸ் ஹோல்டர் வீசிய பந்தில் போல்டாகி அதிர்ச்சியளித்தார் ரிஷப் பண்ட்.
இதனைத் தொடர்ந்து ஏழாவது விக்கெட்டிற்கு விகாரியுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா 16 ரன்கள் மட்டேமே எடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடி வரும் விகாரி 84 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய அணி தற்போதைய நிலவரப்படி, ஏழு விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.
கடந்த போட்டியில், தனது முதல் சதத்தை தவிர விட்ட விகாரி இந்தப் போட்டியில் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்வாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.