இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் லசித் மலிங்கா. இவரது பந்து வீசும் முறை இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அது தவிர மலிங்காவின் ஹேர் ஸ்டைல்க்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் மிகையாகாது.
லசித் மலிங்கா 2004ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடர் வரை அந்த அணியின் பிரதான பவுலராக இருந்துவருகிறார். ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தவர் மலிங்கா.
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மூன்று ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில், முத்தையா முரளிதரன் (523), சமிந்தா வாஸ் (399) ஆகியோருக்கு அடுத்தபடியாக மலிங்கா உள்ளார். இவர் இதுவரை 225 போட்டிகளில் 335 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை அணி, தொடரின் பிந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு மலிங்கா முக்கிய பங்காற்றினார். அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 232 ரன்களே எடுத்தது. ஆனால் அப்போட்டியில் மலிங்கா தனது அட்டகாசமான பந்துவீச்சால் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த உதவினார்.
முந்தைய உலகக்கோப்பைத் தொடர்களைக் காட்டிலும் நடப்புத் தொடரில் இலங்கை அணி பெரிய அடியை வாங்கியது. ஆனால் மலிங்கா தனி ஒரு ஆளாக தனது அணியைக் காக்க போராடினார்.
உலகக்கோப்பை தொடருக்குப்பின் வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் மலிங்கா இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே, வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் மலிங்கா ஓய்வு பெறுவேன் என தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் அணியில் வலுவான அணியாக இருந்த இலங்கை அணி கடந்த சில ஆண்டுகளாக சொதப்பி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததே என்றும், அணியை வலுப்படுத்தாமல் அனுபவ வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதே என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அணியின் தூணாக திகழ்ந்த மலிங்காவும் ஓய்வு பெறுவது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட உலக அளவில் உள்ள மலிங்கா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.