16 அணிகள் பங்கேற்றுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஜப்பான் அணி ஆடுகிறது.
நடப்பு சாம்பியனாகக் களமிறங்கியுள்ள இந்திய அணி முதல் போட்டியில் இலங்கை அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு களமிறங்கவுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ப்ரியம் கார்க், திலக் வர்மா, துருவ் ஜுரெல், திவ்யன்ஷ் சக்ஸேனா ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். அதேபோல் கார்த்திக் தியாகி, சுஷந்த் மிஸ்ரா, ஆகாஷ் சிங், சித்தேஷ் வீர், ரவி பிஷ்னோய் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணியை நிலைகுலையச் செய்கின்றனர்.
ஜப்பான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து ஆடியது. அந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், அந்த அணி இந்தப் போட்டியில் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து தெரியாமல் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் ஜப்பான் அணி பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால், வீரர்கள் சிறப்பாகச் செயல்பட முயல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிச்சயம் இந்தப் போட்டியில் இந்திய அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்திய அணிக்கு ஜப்பான் அணி ஏதேனும் பின்னடைவை ஏற்படுத்துமா என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் அணியின் நீல் டேட், மேக்ஸ், யுகேந்தர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: யு 19 உலகக் கோப்பை: வெற்றியுடன் கணக்கை தொடங்கிய நடப்பு சாம்பியன் இந்தியா!