பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து ஏமாற்றமளித்தது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி முதல் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
கவுதம் கம்பீர் கருத்து
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்பீர், இந்த தொடரில் பிரித்வி ஷா சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்த்தேன். ஏனெனில் கடந்த நியூசிலாந்து தொடரில் அவரது ஃபார்ம் அற்புதமாக அமைந்தது. ஆனால் இத்தொடரில் அவரது ஃபார்ம் குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது.
அதனால் அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை இப்போட்டியில் இந்திய அணி களமிறக்க வேண்டும். அதன்படி மயாங்க் அகர்வால், சுப்மன் கில் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினால், இந்திய அணிக்கு அது பலனளிக்கும்.
நான்காம் இடத்தில் ரஹானே
அதேசமயம் தற்போது விராட் கோலி அணியில் இல்லாததால், நான்காம் இடத்தில் ரஹானே களமிறங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அணியை கேப்டனாக வழிநடத்த அவருக்கு அது உதவும்.
மேலும் ஜடேஜாவை அடுத்த போட்டியில் நிச்சயம் இந்திய அணியில் சேர்க்க வேண்டு. இதனால் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும், அதேசமயம் பேட்டிங்கிலும் வலிமையடையும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஏழை மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் கிரிக்கெட் பயிற்சியாளர்!