கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், இந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நாடு திரும்பினார்.
அணி நிர்வாகத்திற்கும் ரெய்னாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே அவர் தாயகம் திரும்பியதாகத் தகவல் வெளியானது. இந்தக் குற்றச்சாட்டை வலுப்படுத்தும் விதமாக சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன், "யார் வேண்டுமானாலும் அணியில் இருந்து விலகலாம், நான் யாரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை" என்று தெரிவித்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தச் சூழலில் பஞ்சாப்பில் தனது உறவினர்கள் கொலை செய்யப்பட்டதன் காரணமாகவே ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதாக ரெய்னா தெரிவித்தார். மேலும், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் தனது தந்தையைப் போன்றவர் என்றும், தன்னைத் திட்ட அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் ரெய்னா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நான் அவரை (ரெய்னா) எனது மகன் போலவே நடத்தினேன். பல ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் சிஎஸ்கே வெற்றிகரமாக இருக்கக் காரணம், கிரிக்கெட் விஷயங்களில் ஒருபோதும் உரிமையாளர் தலையிடுவதில்லை என்பதே.
இந்தியா சிமென்ட்ஸ் 60களில் இருந்து கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருந்து வருகிறது. நான் எப்போதும் அப்படியே (கிரிக்கெட் விஷயங்களில் தலையிடாமல்) இருப்பேன். அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்புவாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
நாங்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில், ஒரு அணி (சிஎஸ்கே) எங்களுடையது. ஆனால் இங்கு விளையாடும் அனைத்து வீரர்களும் எங்களுக்குச் சொந்தமில்லை. அணி எங்களுடையதுதான், ஆனால் வீரர்கள் இல்லை.
நான் ஒன்றும் கிரிக்கெட் கேப்டன் அல்ல. அணியில் யார் விளையாட வேண்டும், யாரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் (அணி நிர்வாகத்திடம்) ஒருபோதும் சொல்லியதில்லை. மிகச் சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார். எனவே, கிரிக்கெட் விஷயங்களில் நான் ஏன் தலையிட வேண்டும்?" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு கரோனா பாதிப்பு!