இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகள் படைத்துவந்தாலும், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் எதிர்காலம் குறித்தே கேள்விகளும் பேச்சுகளும் அதிகம் எழுந்துள்ளன. இதற்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தாலும், தோனியோ ஜனவரி வரை இதுகுறித்து என்னிடம் கேட்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது ஜனவரி கடந்து பிப்ரவரி மாதமும் வந்துவிட்டது. ஆனாலும் தோனி இன்னும் மெளனம் காத்துவருகிறார். இதனிடையே, தோனிக்கு மாற்று வீரராகக் கருத்தப்பட்ட ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங், பேட்டிங் இரண்டிலும் சொதப்ப அவரை அணி நிர்வாகம் கழிட்டிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி மூலம் கே.எல். ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் பொறுப்பு வழங்கப்பட்டுவருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ராகுல், இதுவரை இல்லாத அளவில் பேட்டிங்கில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்திவருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெல்ல முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
இரண்டு அரைசதம் உள்பட 224 ரன்களைக் குவித்து தொடர் நாயகன் விருதையும் ராகுல் தட்டிச் சென்றார். இதனால், தோனியின் மாற்றுவீரராக கே.எல். ராகுல் இருக்கிறார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்தார்.
இதுஒருபறம் இருந்தாலும், தோனியின் எதிர்காலம் குறித்து இந்திய தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிராத் கூறுகையில், “ஒரு தேர்வுக்குழுத் தலைவராக எனது பணியை தவிர்த்து பார்க்கையில் மற்றவர்களைப் போல் நானும் முதலில் தோனியின் ரசிகன்தான். இரண்டு உலகக் கோப்பை, ஒரு சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் அரங்கில் முதலிடம் என இந்திய அணிக்காக அவர் படைத்த சாதனைகள் ஏராளம். இதனால், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாரும் தோனியிடம் கேட்க முடியாது.
ஆனால், அவரது எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களாக நாங்கள் அணியில் அடுத்தக்கட்ட இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் ராயுடு சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திவந்தாலும் அவருக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போனது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'நிலையில்லா கூட்டத்தில் நிலைக்கும் பெயர் யஷஸ்வி ஜெய்ஷ்வால்'