இங்கிலாந்து - தாய்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது லீக் போட்டி இன்று கான்பெர்ராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீராங்கனைகள் எலன் ஜோன்ஸ், டேனியல் வைட் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட், நட்டாலியா சேவியர் தாய்லாந்து அணியின் பந்துவீச்சை சரமாரியாக வெளுத்து வாங்கினர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஹீதர் நைட், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மேலும் நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் சதத்தையும் பதிவுசெய்தார். அவரைத்தொடர்ந்து நட்டாலியா சேவியரும் அரைசதமடித்து அசத்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. அந்த அணியில் ஹீதர் நைட் 108 ரன்களுடனும், நட்டாலியா சேவியர் 59 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தாய்லாந்து அணியின் தொடக்க வீராங்கனை நட்டகன் சான்டம் அதிரடியாக விளையாடி 32 ரன்களை சேர்த்தார். ஆனால் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீராங்கனைகள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் தாய்லாந்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் இந்தப் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: நெட்டிசன்களுடன் இணைந்து ட்ரம்பை கலாய்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்!