கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இம்மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவைப் பற்றியும், ஆரம்பக்கால வாழ்க்கையைப் பற்றியும் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விராட் கோலி, 'நான் வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் எனது மனைவி அனுஷ்கா சர்மாவை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையை பொறுப்புள்ளவனாக மாற்றிக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் அவரைக் காணும் போது நான் புதுவித உற்சாகத்தைப் பெறுவேன். அவரிடமிருந்து, துன்பத்திலிருந்து எதிர்த்து போராடி அதில் எப்படி வெற்றி காண்பது என்பதை கற்றுகொண்டேன்' என்று கூறினார்.
பின் தனது ஆரம்பக்காலம் பற்றி கூறிய விராட், 'நான் முதல் முறையாக எனது மாநில அணியிலிருந்து நிராகரிக்கப்பட்ட பின்னர், அன்று இரவு முழுவதும் அழுதது எனக்கு நினைவிருக்கிறது. அன்று காலை மூன்று மணி வரை நான் அழுதேன். மேலும் நான் சிறப்பாக செயல்பட்டு இலக்கை எட்டிவிடுவேன் என்று நினைத்த போது அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டதால் அதனை என்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து எனது பயிற்சியாளரிடம் இரண்டு மணி நேரம் விவாதித்திருப்பேன். ஆனால் ஆர்வமும், அற்பணிப்பும் இருக்கும்போது தான் நம்மால் நம்மை முன்னேற்றிக் கொள்ளமுடியும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் விளையாடியதில் இவர்தான் சிறந்த கேப்டன்; ஆனால் அது தோனி கிடையாது: கம்பீர் ஓபன் டாக்!