மும்பையில் ஆண்டுதோறும் டி.ஒய்.படில் விளையாட்டு அகாதமி, மும்பை கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் டி.ஒய்.படில் டி20 தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, ரவுண்ட்ராபின் முறையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பட்டாளமும் இத்தொடரின் பல்வேறு அணிகளில் இடம்பிடித்து அசத்தியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்திக், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக மும்பை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் விஜய் படில் தெரிவித்துள்ளார்.
மேலும், குடலிறக்க அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இத்தொடரில் பங்கேற்பதாக விஜய் தெரிவித்தது, அவர் ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. ஏனெனில் புவனேஷ்வர் குமார், குடலிறக்க பிரச்னையால் பல மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். ஆனால் தற்போது அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மேட்ச் ஃபிக்ஸிங்கில் சிக்கிய ஓமன் வீரருக்கு ஏழு ஆண்டுகள் தடை