கரோனா வைரஸ் காரணமாக பல உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின்போது ஆஸ்திரேலியாவின் வொல்லொங்கொங்கில் வசித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செவிலியான ஷரோன் வெர்கீஸ், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் பணிபுரிந்தும்வருகிறார். இவரின் செயலைக் கண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் ட்விட்டர் பக்கத்தின் காணொலியில் பேசிய கில்கிறிஸ்ட், "ஷரோன் உங்களின் தன்னலமற்ற செயலுக்கு வாழ்த்துகளை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆஸ்திரேலியா முழுவதிலும், இந்தியா முழுவதிலும் மிக முக்கியமாக, உங்கள் முயற்சிகள் குறித்து உங்கள் குடும்பத்தினர் மிகவும் பெருமைப்படுவார்கள். உங்களுக்கு வாழ்த்துகள். தயவுசெய்து இதைத் தொடருங்கள், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஷரோன் வெர்கீஸ், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் வொல்லொங்கொங்கில் செவிலியாக பணிபுரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.