இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சுழற்பந்து வீச்சாளருமாக திகழ்ந்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.எஸ்.சந்திரசேகர். இந்திய அணிக்காக 1961ஆம் ஆண்டு அறிமுகமான சந்திரசேகர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 242 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது 75வயதாகும் சந்திரசேகர், தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஜனவரி 15ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
சந்திரசேகர் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (ஜன.18) மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக கிரிக்கெட் சங்க செய்தித் தொடர்பாளர் வினய் மிருத்யுஞ்சயா (Vinay Mruthyunjaya) கூறுகையில், "முன்னாள் கிரிக்கெட் வீரர் பி.எஸ்.சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஐ.சி.யுவில் இருக்கிறார். இருப்பினும் அவரது உடல்நிலை தற்போது சீராகவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பன்டஸ்லீகா: முல்லரின் சாதனையை முறியடித்த லெவாண்டோவ்ஸ்கி!