கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவரும் இந்திய வீரர் தோனி, நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என சென்னை அணி தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, வரும் மார்ச் 29 மும்பையில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் தயாராகும் வகையில், தோனி வரும் மார்ச் 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடன் ரெய்னாவும் பயிற்சி மேற்கொள்வார் எனவும் வீரர்கள் அனைவரும் சிஎஸ்கே அணியில் இணைந்தபிறகு மார்ச் 19முதல் அணியின் பயிற்சிக் கூட்டம் தொடங்கும் எனவும், அவர் கூறினார்.
ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்திறனை பொறுத்தே, அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அவர் நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!