வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் மனிஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட அதிகார்வபூர்வமற்ற தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய ஏ அணி, நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை எதிர்கொண்டது.
இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில், ரோஸ்டான் சேஸ் (84), டேவான் தாமஸ் (70), ஜோனதன் கார்டர் (54) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் கலீல் அகமது - 4, அவேஷ் கான்- 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 299 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய ஏ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 33.1 ஓவர்களில் இந்திய ஏ அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 160 ரன்களை எட்டியபோது, அக்சர் படேல் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தனர். இவ்விரு இடதுகை வீரர்களும், பொறுப்புடன் பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 70 ரன்களை சேர்த்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மறுமுனையில், அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 63 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 81 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். ஆனாலும், இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய ஏ அணி இப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசிப் போட்டி நாளை கூலிட்ஜ் நகரில் நடைபெறவுள்ளது.