கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. சில நாள்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத் தலைவர் இயர்ஸ் எட்டிங்ஸ், ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக்கோப்பையை நடத்தமுடியாது என தெரிவித்திருந்தார். இதனால் அந்த நாள்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுருந்தது.
இதுகுறித்து ஆஸ்திரேலியத் தொடக்க வீரர் டேவிட் வார்னர் பேசுகையில், '' ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்த முடியுமா என்பது காலத்தின் கையில் தான் உள்ளது. ஏனென்றால் சூழல் கட்டுக்குள் வந்தால் மட்டுமே போட்டிகளை நடத்த முடியும். அரசும் அனுமதியளிக்க வேண்டும். டி20 உலகக்கோப்பை ஒத்தி வைக்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளது.
ஒருவேளை ஒத்தி வைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்கள் ஆவலாக உள்ளார்கள். நாங்கள் பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அரசும் அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதித்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் பங்கேற்போம்.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள தொடரில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். விராட் கோலி சிறந்த வீரர். அவரை இப்போதே ஸ்லெட்ஜிங் செய்ய விரும்பவில்லை. கடந்த முறை அவர்களின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இம்முறை இரு அணிகளுக்கு இடையே சிறந்த போட்டியாக இருக்கும். இந்திய அணியின் பேட்டிங்கிற்கும், ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கும் வலிமை கூடியுள்ளன'' என்றார்.