உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் 19 தொற்றால் இதுவரை 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், பிரிட்டனில் மட்டும் கோவிட் 19 தொற்றால் இதுவரை 61, 474 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,111 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோவிட் 19 தொற்று பாதிப்புக்கு உதவும் வகையில் பலரும் பலவிதமான முறையில் நிதி திரட்டிவருகின்றனர்.
அந்தவகையில்,கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், தான் பயன்டுத்திய ஜெர்சியை ஏலத்தில் விடவுள்ளதாக இங்கிலாந்து வீரர் பட்லர் தெரிவித்திருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பைத் தொடர் இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலை பட்லர் ரன் அவுட் செய்ததால், இங்கிலாந்து அணிக்கு பவுண்டரி கணக்கு விதிப்படி உலகக்கோப்பை கிடைத்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், ஆன்லைன் விற்பனை தளத்தில் விடப்பட்ட இவரது ஜெர்சி 65 ஆயிரம் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 65 லட்சம்) ஏலம் போனது.
இதன் மூலம் கிடைத்த பணம் லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன், ஹார்ஃபீல்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சாம்பியன் ஜெர்சி ஏலத்தில் விற்பனை செய்தது குறித்து பட்லர் கூறுகையில், இந்த ஜெர்சி மிகவும் சிறப்பானதுதான். ஆனால், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நல்ல நோக்கத்திற்காக இந்த ஜெர்சியை ஏலம் விட்டது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: "பீட்டர்சன் மீது எப்போதும் தனக்கு அக்கறை உண்டு" ஆண்டரூ ஸ்ட்ராஸ்!