தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட பணித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவின் முதல் இன்னிங்சில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிகாக் 95 ரன்களை விளாசினார்.
இதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிக்க பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அந்த அணி 15 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ஜோ டென்லி 50, ஜோ ரூட் 29, பென் ஸ்டோக்ஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னரும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் பிலாண்டர் 4, ரபாடா 3, அன்ரிச் நோர்ட்ஜ் 2, டூவைன் ரெட்டோரியஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடிவருகிறது.