இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடிவருகிறது.
இப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்றையப் போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கு ஓய்வு என்பது கட்டாயம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நாள்கள் வீரர்களை மனதளவில் பாதிக்கச் செய்கிறது. அதிலும் இந்திய அணி வீரர்களுக்கு கடந்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் ஓய்வு என்பது இல்லாமல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் விளையாடிவருகிறார்கள்.
தற்போது இங்கிலாந்து தொடர் முடிந்ததும், ஐபிஎல் தொடரிலும் அவர்கள் விளையாடவுள்ளனர். இவர்களும் மனிதர்கள்தான், இவர்களுக்கும் ஓய்வென்பது கட்டாயமான ஒன்று. இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய வீரர்களுக்கு குறைந்தது 2 வாரம் ஓய்வுகாலம் அவசியம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 14 ஏலம் : 61 இடங்களுக்கு 1097 வீரர்கள் பதிவு!