ஒரு தலைவன் உருவாவதற்கு ஒரு யுகமே தேவைப்படும் என்று கூறுவார்கள். அதுபோல் தான் பிசிசிஐ-க்கு நல்ல தலைவர் வர பல வருடங்கள் ஆகிவிட்டது. பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, முதல்தர கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தில் பிசிசிஐ தனி கவனம் செலுத்தும் எனத் தெரிவித்திருந்தார். ஏனென்றால் கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடுவதற்கு வருவாய் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கும்.
இந்நிலையில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றதிலிருந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் முதல்முறையாக இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக ஆடவுள்ளது.
இதனைத்தொடர்ந்து முதல்தர கிரிக்கெட் வீரர்களுடன் பிசிசிஐ ஒப்பந்தம் மேற்கொள்ளும். அதற்காக புதிய நிதிக்குழு உருவாக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட்டில் இனி முதல்தர வீரர்களின் வருவாய் பிரச்னை சிறிது குறையும் எனத் தெரிகிறது. இதுகுறித்து கங்குலி பேசுகையில், முதல்தர கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக உச்சநீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா கமிட்டியிடம் பலமுறை முறையிட்டுள்ளேன். அதனால் தான் இதனை உடனடியாக செய்கிறேன் எனக் கூறினார்.
இதையும் படிங்க: நான் தோல்வியடைந்தால் உங்கள் முன் மீண்டும் வரமாட்டேன்: சச்சின் டெண்டுலகர்!