இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 05ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவு செய்தது.
இப்போட்டியின்போது உபயோகிக்கப்பட்ட எஸ்.ஜி. பந்தின் தரத்தில் பிரச்னை உள்ளதாக இந்திய அணி வீரர்கள் புகார்களை அடுக்கினர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், இப்புகாரை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய விராட் கோலி, “இப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்துகளில் தரம், சிறப்பானதாக இல்லை. ஏனென்றால் இதே பிரச்னைகளை நாங்கள் கடந்த காலங்களிலும் சந்தித்துள்ளோம். 60 ஓவர்களில் கிரிக்கெட் பந்தின் தரம் முழுவதும் சேதமடைவது எந்தவொரு டெஸ்ட் அணிக்கும் மகிழ்ச்சியைத் தராது” என்று தெரிவித்தார்.
முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் விராட் கோலி, இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் உபயோகிக்கப்படும் பந்துகளின் தரம் குறித்து கேள்வியை எழுப்பியிருந்தார்.
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், “இது எங்களுக்கு மிகவும் விநோதமாக இருந்தது. ஏனெனில் இதுவரை எஸ்.ஜி பந்துகள் இதுபோன்று சேதமடைவதை நான் கண்டதில்லை. முதல் இரண்டு நாள்கள் ஆடுகளத்தின் தன்மை கடினமாக இருந்ததினால், பந்து சேதமடைந்தது என நினைத்தேன். ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் 35 - 40 ஓவர்களை வீசிய போதே பந்து சேதமடைந்தது, அதன் தரத்தின் மீதான சந்தேகத்தை உறுதி செய்தது” என்று கூறினார்.
இந்திய வீரர்களின் குற்றச்சாட்டுக்களைப் பரிசீலனை செய்த பிசிசிஐ, பந்து தயாரிப்பாளர்களான சான்ஸ்பரேல்ஸ் கிரீன்லாண்ட்ஸ்யிடம் (எஸ்.ஜி) பந்தின் தரம் குறித்து ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதற்கு பதிலளிதத் எஸ்.ஜி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குனர் பராஸ் ஆனந்த், “வீரர்களின் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, பந்தின் தரத்தை ஆராயுமாறு பிசிசிஐ எங்களிடம் கேட்டுக்கொண்டது. இதனை நாங்கள் மதிப்பீடு செய்வோம் என்று அவர்களிடம் உறுதியளித்துள்ளோம். இருப்பினும், ஆடுகளத்தின் தன்மை குறித்தும் ஒருசில வீரர்கள் குறை கூறியுள்ளதால், அத்தகைய தன்மைக்கொண்ட ஆடுகளத்தில் நாங்கள பந்தினை பரிசோதனை செய்து மதிப்பீடு செய்யவுள்ளோம்.
மேலும் பந்தின் தரத்தை ஆய்வு செய்ய ஆராய்சி மற்று மேம்பாடு நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளோம். அவர்கள் பந்தின் வலிமை, ஆயுள் போன்ற அனைத்து காரணிகளையும் கணக்கில் கொண்டு, தரத்தில் புது முன்னேற்றங்களை வழங்குவோம் என உறுதியளித்துள்ளோம்.
அதேசமயம் கடைசியாக வீரர்கள் அளித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பந்தின் மேன்மைத் தன்மையை, பந்தின் ஆயுள் குறித்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரிலும் பந்துகளின் வடிவமும், ஆயுளும் சிறப்பாகவே உள்ளது. அதனைக் கொண்டு 104 ஓவர்கள்வரையும் வீசமுடியும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையானது பந்தின் வடிவம் குறித்தோ, அல்லது ஆயுள் குறித்தோ அல்ல.
அது பந்தில் ஏற்படும் வெடிப்புகள் குறித்தது. இதற்கும் நாங்கள் ஒரு தீர்வைக் காண்போம் என நம்புகிறேன். இதற்கு நாங்கள் முதலில் நூலில் வேலை சேய்ய வேண்டும். ஏனெனில் பந்தில் தைக்கப்பட்டிருந்த நூல் வெளியே தெரிந்தபோதும், பந்து முழுவதுமாக சேதமடையாமல் இருப்பதை நாங்கள் கண்டோம். அதனால் நடுவர்களும் பந்தை மாற்றவில்லை. அதனால் நாங்கள் யாரையும் குறை கூற விரும்பவில்லை. எங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கூடிய விரைவில் தீர்வை கண்டுபிடிப்போம்” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளில் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக 2018ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அத்தொடரின்போது பயன்படுத்தப்பட்ட எஸ்.ஜி பந்துகளின் ஆயுள் குறித்த கேள்வி எழுந்தது. இக்குற்றச்சாட்டை இந்திய கேப்டன் விராட் கோலியும் முன்வைத்திருந்தார். அதன்பின் எஸ்.ஜி. நிறுவனம் பந்துகளில் சில மாற்றங்களைச் செய்து, அதற்கு தீர்வு கண்டது. அதுபோல தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் எஸ்.ஜி. நிறுவனம் தீர்வு காணும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றோடு நடையைக் கட்டிய ஷரண், அங்கிதா
!