இந்தியாவில் ஆடவருக்கு நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போல மகளிருக்கும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதன் முன்னோட்டமாக மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் 2018இல் அறிமுகமானது.
தொடரின் முதல் சீசனில் சூப்பர்நோவாஸ் - டிரயல் பிளேசர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் ஒரேயொரு போட்டிதான் நடைபெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால், கடந்த சீசனில் ஒரு அணி கூடுதலாகச் சேர்க்கப்பட்டு மொத்தம் நான்கு போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்றன. அதில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி, மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதில், இந்திய வீராங்கனைகளுடன், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனுபவம்வாய்ந்த வெளிநாட்டு வீராங்கனைகளும் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில், மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் மூன்றாவது சீசனில் இன்னும் ஒரு அணி கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்தம் ஏழு போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெறும் எனவும் பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.
இந்தத் தொடரில் புதிதாக என்ட்ரி தரவிருக்கும் அணியின் பெயரையும், இந்தத் தொடருக்கான அட்டவணையும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் ஆடவர் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியபோது இந்த மகளிர் டி20 சேலஞ்ச் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தப்பு பிட்ச்ல இல்ல... எங்க மேல தான்' - ஹனுமா விஹாரி