இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் கடந்த 5ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. பிட்ச்சில் ஏற்பட்ட ஈரப்பதத்தை சரிசெய்ய மைதான ஊழியர்கள் ஹேர் ட்ரையரையும், வேக்யூம் கிளீனரையும் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மைதான ஊழியர்களின் செயல்பாடுகள் பிசிசிஐக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதே போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேரியுள்ளது. உத்தர பிரதேசம் - டெல்லி அணிகளுக்கு இடையே கான்பூரில் உள்ள காம்லா கிரிக்கெட் கிளப் மைதானத்தில் கூச் பிகார் தொடரின் லீக் போட்டி தொடங்கவிருந்தது. ஆனால், பிட்ச்சிலிருந்த ஈரப்பதத்தை காயவைக்க மைதானத்தின் ஊழியர்கள் அயர்ன் பாக்ஸ் (சலவைப் பெட்டி) பயன்படுத்தியதால் மீண்டும் இந்த பிட்ச் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆண்டுதோறும் பிசிசிஐ அனைத்து மாநில வாரியங்களுக்கும் கிரிக்கெட் போட்டிகளை நடத்திட ரூ. 25 கோடி முதல் 30 கோடி வரை நிதி ஒதுக்குகின்றது. அப்படி இருக்கையில் இதுபோன்ற சம்பவத்தால் பிசிசிஐ ஒதுக்கும் நிதியெல்லாம் எங்கே செல்கிறது என்ற கேள்வி அடிப்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் யுத்வீர் சிங் கூறுகையில், தற்போதைய நவீன கால கிரிக்கெட்டில் அயர்ன் பாக்ஸை பயன்படுத்தி பிட்சை காயவைப்பது தவறான அணுகுமுறையாகும். போதுமான நிதி இருக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கவுகாத்தி சம்பவத்திலிருந்து பிசிசிஐ அல்லது அதன் மாநில வாரியங்கள் பிட்சை பராமரிப்பதற்கு இன்னும் பாடம் கற்கவில்லை என்று தெரிகிறது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 500ஆவது டெஸ்ட்...150 ஆவது வெற்றி... அந்நிய மண்ணில் அசத்திய இங்கிலாந்து அணி!