ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் பத்தாவது சீனன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி - சிட்னி தண்டர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு மேக்ஸ் பிரைன்ட் - ஹீஸ்லெட் சிறப்பான அடித்தளத்தை அமைத்து தந்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லின் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்களை எடுத்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் நட்சத்திர வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கேப்டன் ஃபர்குசன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் ராஸ் - ஹோல்ட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் ஏழாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேனியல் சம்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார்.
பின்னர் 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்தது மட்டுமில்லாமல், அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார். இதன் மூலம் சிட்னி தண்டர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனியல் சம்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:விராட் கோலி இரக்கமற்றவர் - ஆரோன் ஃபின்ச்