ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக்கின் பத்தாவது சீனன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீரர்கள் டி ஆர்சி ஷார்ட், வில் ஜேக்ஸ், ஹாண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பென் மெக்டிமோட் - இங்ராம் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெக்டிமோட் (46), இங்ராம் (46) இருவரும் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 19.3 ஓவர்களில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் பீட்டர் சிடில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.
பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிலிப் சால்ட் 6 ரன்களிலும், ரென்ஷோ 2 ரன்னிலும் நடையை கட்டினர். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் அலெக்ஸ் கேரி - வெதர்லேண்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் அலெக்ஸ் கேரி 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்திய வெதர்லேண்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இதனால் 18.4 ஓவர்களிலேயே அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பீட்டர் சிடில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:'முதல் டெஸ்டில் ஜோ பர்ன்ஸ் இடம்பெற வேண்டும்' - ரிக்கி பாண்டிங்