2013ஆம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழலில் சிக்கியதையடுத்து, 7 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து தடைசெய்யப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்த்தின் தடைக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகிறது. இதனால் ஸ்ரீசாந்த் மீண்டும் கேரள ரஞ்சி அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நாள்களுக்கு முன்னதாக நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதைப் பற்றி ஸ்ரீசாந்த் பேசுகையில், ''நடிகர் சுஷாந்த் எனது சிறந்த நண்பர். நானும் மன அழுத்ததில் இருந்துள்ளேன். 2013ஆம் ஆண்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சோகம்தான் என்னைச் சுற்றி இருந்தது.
அந்த நேரத்தில் தற்கொலை எண்ணங்கள் என்னுள் அதிகமாக எழுந்தன. ஆனால் அப்போது எனது குடும்பத்தினரைத்தான் மனதில் நினைப்பேன். அவர்களுக்கு நான் தேவை. சிறிதாக புத்தகம் ஒன்றை எழுதிவருகிறேன். இன்னும் சில நாள்களில் அது வெளிவரும். அதில் நான் கடந்துவந்த பாதை குறித்து எழுதியுள்ளேன்.
கடினமான நேரங்களில் நாம் தனிமையாக்கப்படுவோம். ஆனால் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நல்ல விஷயங்களுக்கு அந்தத் தனிமையை நாம் எதிர்கொண்டேயாக வேண்டும். எனது சின்னச்சின்ன செலவுகளையும் நான் எதிர்கொள்ளச் சிரமப்பட்டுள்ளேன். அப்போது என் மீது நம்பிக்கை வைத்து சில நிகழ்ச்சிகளுக்கு அழைத்தவர்களுக்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்'' என்றார்.