கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பவுலர் இவர்களை விடவும் மிகவும் கடினான ரோல் ஆல்ரவுண்டர்களுக்குதான் இருக்கிறது. ஏனென்றால் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் சொதப்பினால் ஒட்டுமொத்த அணியே ஆல்ரவுண்டர்களை நம்பிதான் இருக்கும். ஒருவேளை அவர்கள் சொதப்பாவிட்டாலும் ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு எப்போதும் அணிக்குத் தேவைப்படும்.
1980 காலக்கட்டங்களில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் சிறந்த ஆல்ரவுண்டர்களின் பெயர்களைக் கேட்டால், ரிச்சர்ட் ஹாட்லி, கபில்தேவ், இம்ரான் கான், இயான் போத்தம் போன்றவர்களின் பெயர்கள்தான் நாம் கூறுவோம்.
இதுவே 1990, 2000 காலக்கட்டங்களில் இந்தக் கேள்வியைக் கேட்டால், பெரும்பாலனோரது நினைவுக்கு ஜாக் காலிஸின் பெயர்தான் நினைவுக்குவரும். ஒரு ஆல்ரவுண்டர் இப்படிதான் இருக்க வேண்டும் என தற்கால கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் காலிஸ்.
பொதுவாக, இந்திய ரசிகர்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியைப் பிடித்தாலும், ஜாக் காலிஸை மட்டும் பிடிக்காது. கிட்டத்தட்ட தென் ஆப்பிரிக்க அணியிலிருக்கும் ஒரு ஆஸ்திரேலிய வீரரைப் போலதான் ஜாக் காலிஸைப் பார்ப்பார்கள். அதற்கு காரணம் ஆஸ்திரேலிய அணியைப்போலதான் இவரது ஆட்டமும் அமைந்திருக்கும். இவர் பேட்டிங் ஆட வந்தாலே, இவரு எப்போதுதான் அவுட்டாவார் எனக் கூறி தலையில் கை வைத்து புலம்புவார்கள் இந்திய ரசிகர்கள்.
ஆட்டத்தின் சூழல் எப்படியிருந்தாலும் இவர் களமிறங்கிய உடன் ஆட்டம் இவரது கட்டுப்பாட்டிற்குள்வரும். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபடாமலே, தனது ரன்களையும் அணியின் ஸ்கோரையும் உயர்த்துவதில் இவருக்கு கை வந்த கலை.
அதேபோலதான் இவரது பந்துவீச்சும். குறிப்பாக, இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்துகொண்டிருக்கிறார்களே என நாம் நினைக்கும் சமயத்தில், இவர் விக்கெட்டுகளை கைப்பற்றி நம்மை ஏமாற்றுவார். இந்தியா மட்டுமல்ல பல எதிரணிகளின் பார்ட்னர்ஷிப்புகளை தகர்ப்பதில் இவர் ஜகஜால கில்லாடி.
2013இல் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஓய்வுபெற்ற இவர், தனது கடைசிப் போட்டியிலும் சதமடித்து இந்திய ரசிகர்களை புலம்ப வைத்துதான் சென்றார்.
சச்சின், ஜாகிர் கான் கலந்த கலவைதான் இந்த ஜாக் காலிஸ். ஏனெனில், சச்சின் அளவிற்கு இவரது பேட்டிங் ஆவரேஜும் அதேசமயம், ஜாகிர் கானைபோல சிறப்பாக விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
166 டெஸ்ட் போட்டிகளில் ஆவரேஜ் 55.37 உடன் 13, 289 ரன்களை குவித்து, 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 328 போட்டிகளில் விளையாடிய இவர், 11, 579 ரன்களை எடுத்துள்ளார். இதில், இவரது ஆவரேஜ் 44.36.
அதேசமயம், 328 ஒருநாள் போட்டிகளில் 292 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதனால்தான் இவர் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தார். தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஜாக் காலிஸுக்கு வாழ்த்துகள்...