வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆகிய அணிகள் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றன. இந்நிலையில், வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி டுப்லின் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஷாய் ஹோப் 87, ஜேசன் ஹோல்டர் 62 ரன்களை அடித்தனர். வங்கதேசம் அணி தரப்பில் முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகளையும், அந்த அணியின் கேப்டன் மொர்டாசா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 248 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் அணி 47. 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் 63, சவுமியா சர்கார் 54 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் வங்கதேச அணி இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வங்கதேசம் அணி, மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.