பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்பை போல் இல்லாமல் தற்போது மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக, பவுலிங், ஃபீல்டிங் இரண்டிலும் அந்த அணியின் செயல் வேதனையளிக்கிறது என்ற விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், பாகிஸ்தான் அணியைப் போன்று களத்தில் போராடும் குணம் வேறு எந்த அணிக்கும் இல்லை.
கடைசி விக்கெட் வரையும் அந்த அணி வெற்றிக்காக போராடும் என்பதை பலமுறை பார்த்திருப்போம். தற்போது மீண்டும் ஒருமுறை தங்களது குணத்தை பாகிஸ்தான் அணி வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்போட்டி அடிலெய்டில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் வார்னரின் முச்சதத்தால் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 589 ரன்களை சேர்க்க, பதிலுக்கு முதல் இன்னிங்சை விளையாடிவரும் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்தபோது இரண்டாம் ஆட்டநாள் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணியின் வீரர் பாபர் அசாம் 43 ரன்களுடனும், யாசிர் ஷா 4ரன்களுடனும் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியை விட பாகிஸ்தான் அணி 493 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், நிச்சயம் ஃபாலோ ஆன் பெறும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கி நடைபெற்றுவரும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாபர் அசாம், யாசிர் ஷா ஆகியோர் தங்களது சிறப்பான பேட்டிங்கால் அதை பொய்யாக்கினர்.
பாபர் அசாம் - யாசிர் ஷா இருவரும் பவுண்டரிகளாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் வார்னருக்கு சமமாக விளையாடிய பாபர் அசாம் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கையில், அவர் 97 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், பாபர் அசாம் - யாசிர் ஷா இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு சேர்த்த 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.
பாபர் அசாமைத் தொடர்ந்து வந்த ஷஹீன் அஃப்ரிடி ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டானதால், பாகிஸ்தான் அணி 194 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தபோது, பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக யாசிர் ஷா, சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். அவ்வபோது அவர் தந்த கேட்ச், ஸ்டெம்பிங் வாய்ப்புகளையெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் வீணடித்தனர். இதை பயன்படுத்திக் கொண்டு, அபாரமாக பேட்டிங் செய்த யாசிர் ஷா சதம் விளாசி அனைவரது புருவத்தையும் உயர்த்தச் செய்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசல்வுட் ஆகியோரது பந்துவீச்சை மிக தைரியாக எதிர்கொண்டு விளையாடினார். யாசிர் ஷா - முகமது அபாஸ் ஜோடி ஒன்பதாவது விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்த நிலையில், முகமது அபாஸ் 29 ரன்களுடன் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 213 பந்துகள் எதிர்கொண்டு 13 பவுண்டரிகள் உட்பட 113 ரன்கள் எடுத்தபோது, யாசிர் ஷா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், பாகிஸ்தான் அணி 94.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 6, கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
-
Yasir Shah brings up his maiden Test 100, just! #OhWhatAFeeling@toyota_aus | #AUSvPAK pic.twitter.com/VitU3A2pWm
— cricket.com.au (@cricketcomau) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Yasir Shah brings up his maiden Test 100, just! #OhWhatAFeeling@toyota_aus | #AUSvPAK pic.twitter.com/VitU3A2pWm
— cricket.com.au (@cricketcomau) December 1, 2019Yasir Shah brings up his maiden Test 100, just! #OhWhatAFeeling@toyota_aus | #AUSvPAK pic.twitter.com/VitU3A2pWm
— cricket.com.au (@cricketcomau) December 1, 2019
பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியை விட முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் பின்தங்கியதால், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணிக்கு ஃபாலோ ஆனை தந்ததையடுத்து, பாகிஸ்தான் தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவருகிறது.
இதையும் படிங்க: 73 வருட சாதனையை தகர்த்தெறிந்த ஸ்டீவ் ஸ்மித், பிராட்மேனையும் விட்டுவைக்கவில்லை!