தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தலா மூன்று போட்டிகள் அடங்கிய டி20, ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில், ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வென்றது.

இந்நிலையில், இந்தத் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான வார்னர், கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்களைச் சேர்த்த நிலையில், டேவிட் வார்னர் 37 பந்துகளில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஃபின்ச் 37 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். அதில், ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் 15 பந்துகளில் 30 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

இதனால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 193 ரன்களைக் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, அன்ரிச் நோர்டே, லுங்கி இங்கிடி, டுவைன் பெட்ரோசியஸ், ஷாம்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் ஐந்து ரன்களில், ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். இதனால், தென் ஆப்பிரிக்க அணி 0.4 ஓவர்களில் ஆறு ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து ரன்குவிப்பில் தடுமாறியது.
அதன்பின் வான்டெர் டுசைன் (24), ஹென்ரிச் கிளாசேன் (22) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், ஆஷ்டன் அகார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் 2014, 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் 111 ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் பார்ல் நகரில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை - நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா