ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும்பட்சத்தில் டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி & கோ மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்திருந்தாலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது.
அந்த வரிசையில் நாளை நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கிறது.
தவான், கோலி, பாண்டியா, சாம்சன், கே.எல். ராகுல் என பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவது இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க ஏதுவாக அமைந்துள்ளது. அதிலும் கடந்த போட்டியில் தவான், கோலி, ஹர்திக் பாண்டியாவின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி 190 ரன்களை சேஸ் செய்து அசத்தியது.
அதேசமயம் பந்துவீச்சாளர்கள் வரிசையில் அறிமுக வீரர் ‘சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்’ நடராஜனின் துல்லியமான பந்துவீச்சுத்திறன் எதிரணியினரின் ரன் வேட்டைக்கு ஒரு தடையாக அமைந்துள்ளது. அதிலும் அவர் கடந்த போட்டியில் ரன்களைக் கட்டுப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆனால் பிற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரிவழங்குவதன் காரணமாக இந்திய அணி சேஸிங்கில் சற்று கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளது. அதனால் நாளை ஆட்டத்தில் பந்துவீச்சில் சில மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உத்தேச அணி: ஷிகர் தவான், கே.எல். ராகுல், விராட் கோலி (கே), சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே/ மயாங்க் அகர்வால், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்/ ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா.
ஆஸ்திரேலியா:
வீரர்களின் காயம், ஸ்டார்க்கின் விலகல், மிடில் ஆர்டரில் சொதப்பும் மேக்ஸ்வெல், பந்துவீச்சில் தடுமாற்றம் போன்ற காரணங்களால் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது.
இருப்பினும் கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை மேத்யூ வேட், ஸ்டீவ் ஸ்மித் வெளுத்து வாங்கி, இமால இலக்கை நிர்ணயித்தனர். இதனால் நாளைய ஆட்டத்திலும் அவர்களின் அதிரடி ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் தொடக்க வீரர் ஆர்சி ஷார்ட், மேக்ஸ்வேல் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவருவதால் நாளைய ஆட்டத்தில் இவர்களுக்கு மாற்றாக லபுசாக்னே, அலெக்ஸ் கேரி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதேசமயம் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜோஷ் ஹசில்வுட் நாளைய ஆட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நாளைய போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உத்தேச அணி: டி ஆர்சி ஷார்ட்/அலெக்ஸ் கேரி, மேத்யூ வேட்(கே) ஸ்டீவ் ஸ்மித், ஹென்ரிக்ஸ், கிளென் மேக்ஸ்வெல்/ லபுசாக்னே, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபோட், டேனியல் சாம்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஸாம்பா.
இதையும் படிங்க:AUS A vs IND A: கிரீன் சதத்தால் ஃபாலோ ஆனை தவிர்த்த ஆஸ்திரேலியா ஏ